Monday, December 12, 2011

துணையும் துணைவனும்

என்றைக்கோ எதன் பொருட்டோ
சந்தித்தோம்
இறுதி வரை துணை
நீ என்றாயிற்று
சுற்றம் சூழ்ந்திருந்த போதும்
உன்னையே நாடும் ஏக்கம்
இன்பத்திலும் துன்பத்திலும்
வெற்றியிலும் தோல்வியிலும்
ஏற்றத்திலும் தாழ்விலும்
உன்னோடு நான்
முப்பொழுதும் துணையாய் நீ
எப்பொழுதும் துணைவனாய் நீ
உன்னை பிரியும் காலமும்
வருமோ என் தனிமையே?

குறை

ஆணும் பெண்ணுமாய் நீ
அம்மையப்பன் என்று வணங்கினர்
ஆணும் பெண்ணுமாய் நான்
அலி என்ற ஏளனப் பெயர்கொண்டு
உன் திருநங்கைப் படைப்பை
குறை சொல்லுவதா?
அல்லது
குறுகிய மனம் கொண்டு
மானுடம் படைத்ததை
குறை சொல்லுவதா?

உன் படைப்பு

ஆணென்றும் பெண்ணென்றும் படைத்தாய்
ஆச்சரியம் அடைந்தேன் !
ஆறறிவு புகுத்தினாய் 
'ஆ' வென்று பார்த்தேன் !!
வேற்றுமையில் வலிமையை வித்திட்டாய்
வியந்து போனேன் !!!
அவர்களுள் 
குறுகிய மனம் படைத்தாய்
குறை கண்டேன் உன் படைப்பில்
உனக்கும் அடி சறுக்கியதோ 
என்னை படைத்தவனே?!

Sunday, May 22, 2011

உயிர்க் காதல்

காதல் வயப்பட்டாள்
மறுபடியும்!
மலர்ந்ததும், படர்ந்ததும்
அறியும் முன்னே
ஆட்கொண்டது அவளை!
சரணடைந்தாள்
காதலின் மோகத்தில்!
மெல்ல மெல்ல 
தன்னை இழந்தாள்
புற்று நோய் 
அவள் மீது கொண்ட காதலில்!

துணை

த‌னிமைக்குத் துணையாக‌
உன்னை அழைத்தேன்
என் த‌னிமை
உன்னையும் அச்சுறுத்திய‌தோ
வ‌ர‌ ம‌றுத்தாயே
என் க‌ண்ணீரே

Sunday, February 13, 2011

சிவந்தது

உன் அழகை
நான் ரசிக்க
வெட்கத்தில் 
சிவந்தாயா
இல்லை
கோபத்தில் 
சிவந்தாயா?

Saturday, February 5, 2011

அவ‌னிட‌த்தில் அவ‌னாய்....

க‌ன‌வுக‌ளும், ஆசைக‌ளும்
உன‌க்கு ம‌ட்டும் சொல்லி
பிடித்த‌வையும், பிடிக்காத‌வையும்
உன்னிட‌ம் பேசி
வெட்க‌த்திலும், அழுகையிலும்
உன் மார்பில் முக‌ம் புதைத்து
ஊட‌லும் கூட‌லுமாய்
உன்னை வில‌கியும், க‌ட்டிய‌ணைத்தும்
ப‌க‌லிலும், இர‌விலும்
இன்பங‌க‌ளையும் துன்ப‌ங்க‌ளையும்
ப‌கிர்ந்து கொள்ள‌
அவ‌னாய் விள‌ங்கும்
என் த‌லைய‌ணையே!
உன்னிட‌த்தை
அவ‌ன் அடையும் நாளெதுவோ?!