Saturday, April 6, 2024

துரோகம்

சிதைந்தது  நம்பிக்கை கற்பழிக்கப்பட்டு 
அலைந்தது மனம் அம்மணமாய் 
நிகழ்ந்திருந்தது துரோகம்

படிக்காதவன்

பாடத்தை கவனிக்காத மாணவன் 
அரைகுறையாய் செய்த வேலை 
அரைவேக்காடு முட்டை

உணவுக்கலவி

இருவரும் உரசிக் கொள்ள
உடல் கத கதப்பில் மெல்ல
வெண்ணிற ஆடை தகர்த்து
பொன்னிற மேனி வெளிப்பட
அரங்கேறியது ஒரு தோசையின் பிறப்பு

இட்லி

எப்பொழுதும் வெள்ளை ஆடையில்
விதவையாய் அவள்!
மருமணத்தின் முயற்சி - பொடி இட்லி

துர்நாற்றம்

பலமுறை முகர்ந்துப் பார்த்தான், கலவிக்கு முன் 
தன் மீது துர்நாற்றம் வீசுகிறதா என்று 
முகம் சுளிக்காமல் சாக்கடை தூய்மை செய்பவன்

காதல் செய்வீர்!

காதலிக்கும் ஒவ்வொருத்தருக்குள்ளும் 
கவிதத்துவம் பிறக்குமாமே!
ஆதலால் காதல் செய்வீர்!

Sunday, March 31, 2024

இனிப்பானவன்

அவன் ஒரு சர்க்கரை பிரியன்  
ஆதலாலேயே உடல் பெருத்தான்  
அவன் பெயர் "ரசகுல்லா" 

ஆறுதல்

புரிந்துக் கொண்ட  
இருவரின் உறவுக்குள் 
மிகப்பெரிய ஆறுதலாய் மௌனம்! 

காதலர் தினம்

காதலைத் தன் மைக் கொட்டி எழுதிய பேனாவும் 
அதைச் சுமந்துச் சென்ற காகிதமும் 
காதலர் தினம் கொண்டாடியது, அவர்களுக்கானதென்று 

Wednesday, February 21, 2024

ஜன்னலோரம்

தினசரி பேருந்துப்  பயணம்
அன்றைய இமாலய வெற்றி
ஜன்னலோர இருக்கை 

காக்கை

காக்கைக் கரைந்தது 
விருந்தினர் வருவர் என்று சொல்லிக் கடந்தனர்
காக்கைக் கரைந்தது பசியோடு
 

Tuesday, February 20, 2024

சுமைதாங்கி

எழுதாத பேனாவும்
எழுதப்படாத  காகிதமும்
சொல்லப்படாத காதலுக்குச் சுமைதாங்கியாய்!

தகப்பன்

சிற்பி வடித்த சிலை கடவுளாகக் கோவிலில் 
தரிசித்தான் தூரத்திலிருந்து
தத்துக் கொடுத்த தகப்பனாய்
 

Wednesday, January 24, 2024

முந்தானை

எப்பொழுதும் திட்டிக் கொண்டே சாப்பிடும் அவன் 
பேசாமல் பரிமாறும் அவள்
கைகழுவியதும் தேடுகிறான் அவளின் முந்தானையை

வாழ்க்கைத் தத்துவம்

முடித் திருத்தகங்கள் சொன்னது 
ஆழமான வாழ்க்கைத் தத்துவம் 
மயிராப் போச்சு! 

உரை

ஈரடி குறள் 
உரைநூல்கள் பல 
தீராத தாகமாய்

தாகம்

தண்ணீர் கேட்டாள் 
தன் தாகத்திற்கு 
மோர் விற்கச் செல்லும் பாட்டி 

ஒழுக்கம் தவறாமை

பெற்றோர்களின் காலை நேரத்துச் சாலை விதி மீறல்கள் 
பள்ளி சிறுவர்களின் 
நேரம் தவறாமை ஒழுக்கத்திற்காக !

ஹைக்கூ

மூன்று வரி கவிதை
அதன் இலக்கண வகுப்போ 
நீண்டது ஒன்றரை மணி நேரம்!