Monday, December 12, 2011

துணையும் துணைவனும்

என்றைக்கோ எதன் பொருட்டோ
சந்தித்தோம்
இறுதி வரை துணை
நீ என்றாயிற்று
சுற்றம் சூழ்ந்திருந்த போதும்
உன்னையே நாடும் ஏக்கம்
இன்பத்திலும் துன்பத்திலும்
வெற்றியிலும் தோல்வியிலும்
ஏற்றத்திலும் தாழ்விலும்
உன்னோடு நான்
முப்பொழுதும் துணையாய் நீ
எப்பொழுதும் துணைவனாய் நீ
உன்னை பிரியும் காலமும்
வருமோ என் தனிமையே?

குறை

ஆணும் பெண்ணுமாய் நீ
அம்மையப்பன் என்று வணங்கினர்
ஆணும் பெண்ணுமாய் நான்
அலி என்ற ஏளனப் பெயர்கொண்டு
உன் திருநங்கைப் படைப்பை
குறை சொல்லுவதா?
அல்லது
குறுகிய மனம் கொண்டு
மானுடம் படைத்ததை
குறை சொல்லுவதா?

உன் படைப்பு

ஆணென்றும் பெண்ணென்றும் படைத்தாய்
ஆச்சரியம் அடைந்தேன் !
ஆறறிவு புகுத்தினாய் 
'ஆ' வென்று பார்த்தேன் !!
வேற்றுமையில் வலிமையை வித்திட்டாய்
வியந்து போனேன் !!!
அவர்களுள் 
குறுகிய மனம் படைத்தாய்
குறை கண்டேன் உன் படைப்பில்
உனக்கும் அடி சறுக்கியதோ 
என்னை படைத்தவனே?!