Friday, September 13, 2024

ஆசைகள்

வறுமையில் ஆசைகள் 
பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் வைரங்கள்!

பாரம்

பள்ளிப் புத்தகப்பை பாரமென்ற புலம்பலுக்கிடையில் 
வாழைத்தாரையும், முட்டைகளும் சுமந்து சம்பாதித்துவிட்டு 
பள்ளி செல்லும் சிறுவர்கள் 
 

வேடிக்கை உலகம்

ஜன்னலோரப் பயணம்
வேடிக்கைப் பார்க்கும் சாக்கில் 
அவரவர் உலகத்தில் ஒளிந்துகொள்ள

Friday, July 19, 2024

பிளேபாய் (Playboy)

பத்துப் பொருத்தங்களும் வேடிக்கைப் பார்க்க 
தினம் ஒரு விதமென ஜோடி சேர்ந்தான் பலரோடு 
எவரொடு சேர்ந்தாலும் தன்னிலை மாறாத பிளேபாயாக தயிர்சாதம் 

தண்டவாள எண்ணங்கள்

இரயிலில் ஜன்னலோரப் பயணம் 
அசைப்போட்டது மனம் பலவற்றை 
மாறி மாறி செல்லும் தண்டவாள எண்ணங்களாய் 

இதம்

ஜன்னலோரப் பயணத்தின் சுகம் வேடிக்கைப் பார்ப்பது 
அந்த சுகத்தில் இதம்
அழகான ஆடவனை நிறுத்தத்தில் காண்பது 

கன்னக்குழி

அவன் புன்னகைக்கையில் புதிதாய்த் தோன்றிய கன்னக்குழி 
சத்தமில்லாமல் சொன்னது 
அவள்  முத்தத்தின் ஆழத்தை 

Tuesday, July 16, 2024

சூப்பர் ஸ்டார்

இளம் ஹீரோக்களுக்கு மத்தியில் 
மவுசு குறையாத வயதான சூப்பர் ஸ்டாராக திருப்பதி லட்டு

அரசியல்

பேதங்களில்லை என்ற மேடைப் பேச்சு 
நான்கு சுவருக்குள்ளே "நம்மாளுங்க மட்டும்" என 
உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டிய அரசியல்வாதியாய் கொழுக்கட்டை 

கலப்புத் திருமணம்

சில்க் ஸ்மிதா போன்ற அழகு அவள் 
அவளைக் கண்டு உருகும் வெளிநாட்டு மாப்பிள்ளையாய் அவன் 
சொர்க்கத்தை நினைவூட்டும் ஜோடியாய் வலம் வந்தனர்
குலோப் ஜாமூனும் வெண்ணிலா ஐஸ்கிரீமும்

Saturday, July 13, 2024

வெட்கத்தின் நிறம் ரோஸ்

புதுமணத் தம்பதிகளாய் முதலிரவு அறைக்குள் 
வெட்கத்தில் அவள் முகம் பூசிக்கொண்டது மெலிதான ரோஸ் நிறம் 
கலவியின் உச்சத்தில் உருவானது பால் பாயசம்
 

குழப்பம்

கருப்பர்களும் வெள்ளையர்களும் 
இணைந்து வாழ முயற்சித்ததன் விளைவு 
குழம்பிப் போன குளம்பி எனும் காபி
 

சிவந்தனள்

கூட்ட நெரிசலில் 
எங்கிருந்தோ கைகள் தன் வளைவுகளைத் தீண்ட 
சிவந்து கொதித்தெழுந்தாள் கைமுறுக்கு 

Saturday, April 6, 2024

துரோகம்

சிதைந்தது  நம்பிக்கை கற்பழிக்கப்பட்டு 
அலைந்தது மனம் அம்மணமாய் 
நிகழ்ந்திருந்தது துரோகம்

படிக்காதவன்

பாடத்தை கவனிக்காத மாணவன் 
அரைகுறையாய் செய்த வேலை 
அரைவேக்காடு முட்டை

உணவுக்கலவி

இருவரும் உரசிக் கொள்ள
உடல் கத கதப்பில் மெல்ல
வெண்ணிற ஆடைத் தகர்த்து
பொன்னிற மேனி வெளிப்பட
அரங்கேறியது ஒரு தோசையின் பிறப்பு

விதவை? மறுமணம்?

எப்பொழுதும் வெள்ளை ஆடையில்
விதவையாய் அவள்!
மறுமணத்தின் முயற்சி - பொடி இட்லி

துர்நாற்றம்

பலமுறை முகர்ந்துப் பார்த்தான், கலவிக்கு முன் 
தன் மீது துர்நாற்றம் வீசுகிறதா என்று 
முகம் சுளிக்காமல் சாக்கடை தூய்மை செய்பவன்

காதல் செய்வீர்!

காதலிக்கும் ஒவ்வொருத்தருக்குள்ளும் 
கவிதத்துவம் பிறக்குமாமே!
ஆதலால் காதல் செய்வீர்!

Sunday, March 31, 2024

இனிப்பானவன்

அவன் ஒரு சர்க்கரை பிரியன்  
ஆதலாலேயே உடல் பெருத்தான்  
அவன் பெயர் "ரசகுல்லா" 

ஆறுதல்

புரிந்துக் கொண்ட  
இருவரின் உறவுக்குள் 
மிகப்பெரிய ஆறுதலாய் மௌனம்! 

காதலர் தினம்

காதலைத் தன் மைக் கொட்டி எழுதிய பேனாவும் 
அதைச் சுமந்துச் சென்ற காகிதமும் 
காதலர் தினம் கொண்டாடியது, அவர்களுக்கானதென்று 

Wednesday, February 21, 2024

ஜன்னலோரம்

தினசரி பேருந்துப்  பயணம்
அன்றைய இமாலய வெற்றி
ஜன்னலோர இருக்கை 

காக்கை

காக்கைக் கரைந்தது 
விருந்தினர் வருவர் என்று சொல்லிக் கடந்தனர்
காக்கைக் கரைந்தது பசியோடு
 

Tuesday, February 20, 2024

சுமைதாங்கி

எழுதாத பேனாவும்
எழுதப்படாத  காகிதமும்
சொல்லப்படாத காதலுக்குச் சுமைதாங்கியாய்!

தகப்பன்

சிற்பி வடித்த சிலை கடவுளாகக் கோவிலில் 
தரிசித்தான் தூரத்திலிருந்து
தத்துக் கொடுத்த தகப்பனாய்
 

Wednesday, January 24, 2024

முந்தானை

எப்பொழுதும் திட்டிக் கொண்டே சாப்பிடும் அவன் 
பேசாமல் பரிமாறும் அவள்
கைகழுவியதும் தேடுகிறான் அவளின் முந்தானையை

வாழ்க்கைத் தத்துவம்

முடித் திருத்தகங்கள் சொன்னது 
ஆழமான வாழ்க்கைத் தத்துவம் 
மயிராப் போச்சு! 

உரை

ஈரடி குறள் 
உரைநூல்கள் பல 
தீராத தாகமாய்

தாகம்

தண்ணீர் கேட்டாள் 
தன் தாகத்திற்கு 
மோர் விற்கச் செல்லும் பாட்டி 

ஒழுக்கம் தவறாமை

பெற்றோர்களின் காலை நேரத்துச் சாலை விதி மீறல்கள் 
பள்ளி சிறுவர்களின் 
நேரம் தவறாமை ஒழுக்கத்திற்காக !

ஹைக்கூ

மூன்று வரி கவிதை
அதன் இலக்கண வகுப்போ 
நீண்டது ஒன்றரை மணி நேரம்!