Wednesday, October 1, 2025

பசலை நோய்

பசலை நோயில் மரங்கள் 
இலையுதிர் காலம்!

முதிர்க்கன்னி

காதல், கல்யாணம், குடும்பம் 
அவள் கனவாய் !
முதிர்க்கன்னி அவள் !

வாழ்க்கை

வழுக்கு மரம் ஏறியதில்லை என்றேன் 
சிரித்தது வாழ்க்கை 
என்னைப் பார்த்து
 

சுத்தம்

சாக்கடை அள்ளுபவனின்  நாசியை 
சுத்தம் செய்தது 
மீன் குழம்பு வாசம்

பிரசவ வலி

காசு இல்லா நாட்கள் 
அண்டிப் பிழைத்த உணவு  
தொண்டைக்குள் பிரசவ வலி

நிர்வாணம்

இலை உதிர்ந்த மரங்கள் நிர்வாணமாய்
மேலாடைப் போர்த்தின 
வெள்ளை பனிக்கட்டிகள்
 

Monday, February 10, 2025

போதிமரங்கள்

வாழ்க்கையின் இரைச்சலிலிருந்து 
அவ்வப்போது விடுவிக்கும் 
தற்காலிக போதிமரங்களாய் - டீக்கடைகள்!

புதிது

பண்டிகைக்குக் கூட புதிது வாங்காத 
அம்மாவும் அப்பாவும்
புதுத்துணிப் போட்டிருந்தனர் - ஈமச்சடங்கில்

டீக்கடைகள்

மயானத்திலும்  ஜாதி மதப் பிரிவு 
மறக்கச் செய்கின்றன 
சாலையோர டீக்கடைகள் 

Monday, January 27, 2025

அதிகபட்ச ஆசை

தனக்கென ஒரு அறை
அவளின் அதிகபட்ச ஆசை 
வாய்விட்டு அழுவதற்கு

நினைவுகள்

பிரிவின் காயங்கள் 
இதமாய் வருடும் 
மயிற்பீலியாய் நினைவுகள்
 

Friday, September 13, 2024

ஆசைகள்

வறுமையில் ஆசைகள் 
பூமிக்கடியில் புதைந்திருக்கும் வைரங்கள்

பாரம்

பள்ளிப் புத்தகப்பை பாரமென்ற புலம்பலுக்கிடையில் 
வாழைத்தாரையும், மூட்டைகளும் சுமந்து சம்பாதித்துவிட்டு 
பள்ளி செல்லும் சிறுவர்கள் 
 

வேடிக்கை உலகம்

ஜன்னலோரப் பயணம்
வேடிக்கைப் பார்க்கும் சாக்கில் 
அவரவர் உலகத்தில் ஒளிந்துகொள்ள

Friday, July 19, 2024

பிளேபாய் (Playboy)

பத்துப் பொருத்தங்களும் வேடிக்கைப் பார்க்க 
தினம் ஒரு விதமென ஜோடி சேர்ந்தான் பலரோடு 
எவரொடு சேர்ந்தாலும் தன்னிலை மாறாத பிளேபாயாக தயிர்சாதம் 

தண்டவாள எண்ணங்கள்

இரயிலில் ஜன்னலோரப் பயணம் 
அசைப்போட்டது மனம் பலவற்றை 
மாறி மாறி செல்லும் தண்டவாள எண்ணங்களாய் 

இதம்

ஜன்னலோரப் பயணத்தின் சுகம் வேடிக்கைப் பார்ப்பது 
அந்த சுகத்தில் இதம்
அழகான ஆடவனை நிறுத்தத்தில் காண்பது 

கன்னக்குழி

அவன் புன்னகைக்கையில் புதிதாய்த் தோன்றிய கன்னக்குழி 
சத்தமில்லாமல் சொன்னது 
அவள்  முத்தத்தின் ஆழத்தை 

-------------

Alternate Version

அவன் புன்னகைக்கையில்
புதிதாய் தோன்றிய கன்னக்குழி
அவள் முத்தத்தின் ஆழம்

Tuesday, July 16, 2024

சூப்பர் ஸ்டார்

இளம் ஹீரோக்களுக்கு மத்தியில் 
மவுசு குறையாத வயதான சூப்பர் ஸ்டாராக திருப்பதி லட்டு

அரசியல்

பேதங்களில்லை என்ற மேடைப் பேச்சு 
நான்கு சுவருக்குள்ளே "நம்மாளுங்க மட்டும்" என 
உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டிய அரசியல்வாதியாய் கொழுக்கட்டை